எரிவாயு வெடிப்பு சம்பவங்களை ஆராயும் நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

எரிவாயு வெடிப்பு சம்பவங்களை ஆராயும் நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் எரிவாயு விநியோகத்தை ஒழுங்குப்படுத்துவதற்கான ஒழுங்குப்படுத்தல் குழு ஒன்றை நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கையில் பதிவான எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள்குறித்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இன்று(20) தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது.

இந்த அறிக்கையில் குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையிலான பரிந்துரைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக லிட்ரோ நிறுவனத்துக்கென்று விசேடமான பரிந்துரைகளும், இரு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்குமான பொதுவான பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருப்பதாக குறித்த நிபுணர்கள் குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பலகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பான ஒழுங்குப்படுத்தல் குழு ஒன்று இல்லை.

எனவே எதிர்காலத்தில் இதற்கான ஒழுங்குப்படுத்தல் குழு ஒன்றை நியமிப்பதன் ஊடாக, இந்த பிரச்சினையை நீண்டகால அடிப்படையில் தீர்த்துக் கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.