தீபாவளி பிறந்த கதை? வரலாற்றில் நடந்த சுவாரசியம்!

தீபாவளி பிறந்த கதை? வரலாற்றில் நடந்த சுவாரசியம்!

தீமை அழிந்து நன்மை பிறக்கும் நாள் தீபாவளி. தீ- ஒளி(விளக்கு), ஆவளி-(வரிசையாக விளக்கேற்றி வைப்பது). அதாவது மக்களுக்கும் தேவர்களுக்கும் கடும் அச்சுறுத்தலை தந்துகொண்டிருந்த நரகாசுரனின் இறப்பை கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி பிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.

புராணம்-1.திருமாலின் அவதாரத்தில் ஒன்றான “வராக“ அவதாரத்தின்போது திருமால் பூமியை துளைத்துக்கொண்டு பூமிக்கு அடியில் இருக்கும் அரக்கர்களை கொல்கிறார். அப்போது திருமாலின் பரிசம் பட்டு பூமாதேவிக்கு பிறந்தவன்தான் இந்த நரகாசுரன்

அரக்கர்களை துவம்சம் செய்யும்போது பிறந்ததால் நரகாசுரனுக்கு அரக்கக் குணம் வந்துவிடுகிறது. இதனால் மக்களையும் தேவர்களையும் கடுமையாக அச்சுறுத்துகிறான். மேலும் கடுமையான தவத்தை மேற்கொண்ட நரகாசுரன் பிரம்மனிடம் இருந்து “தன்னுடைய தாயைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாதவாறு வரம்“ பெற்றுவிடுகிறான்.

இப்படி அரிய வரத்தைப் பெற்ற நரகாசுரனின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில் பிரம்மன் மீதே நரகாசுரன் போர்த் தொடுக்கிறான். இதையடுத்து கிருஷ்ண பகவான் அனைவரையும் காப்பாற்றும் பொருட்டு நரகாசுரனை எதிர்த்து போர்த் தொடுத்துச் செல்கிறார். கூடவே சத்தியபாமாவை தேர் ஓட்டியாக கிருஷ்ணன் அழைத்துச் செல்கிறார்.

நரகாசுரனுக்கும் கிருஷ்ணனுக்கும் கடுமையான போர் நடக்கிறது. அப்போது நரகாசுரன் விட்ட அம்பினால் கிருஷ்ணன் சரிந்து மண்ணில் விழுகிறார். உண்மையில் காயம் பட்டு கிருஷ்ணன் விழவில்லை. காயம் பட்டவாறு நடிக்கிறார். இதையறியாத சத்யபாமா கோபம் கொண்டு நரகாசுரன் மீது சரமாரியாக அம்பு வீசுகிறார். இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத நரகாசுரன் ஒருகட்டத்தில் சத்யபாமாவை பார்த்து “அம்மா“ என்று கதறிக்கொண்டே சரிந்து விழுகிறான்.

காரணம் சத்யபாமா பூமாதேவியின் அம்சம் என்பது தெரியாமலே நரகாசுரன் செயல்பட்டதினால் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் நரகாசுரன் இறக்கும்போது தன்னுடைய இறப்பை(தீமை அழிந்து நன்மை பிறப்பதை) மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சத்யபாமாவும் கிருஷ்ணனும் அவனுக்கு வரம் கொடுக்கின்றனர். அந்த அடிப்படையிலேயே தீபாவளி பண்டிகையும் பிறக்கிறது.

2.அரக்கர்களை வேட்டையாடிய இராமன் 14 ஆண்டுகால வன வாசத்தை முடித்துக் கொண்டு அயோத்திக்கும் வரும்பொழுது மக்கள் நகரம் முழுவதும் விளக்குகளை ஏற்றி அவரை வரவேற்றதாகவும் அந்தக் கொண்டாட்டத்தினால் தீபாவளி பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆய்வாளர் கருத்து- தீபாவளி பண்டிகையைக் குறித்து மறைந்த பேரறிஞர் தொ.பரமசிவன் அவர்கள், தீபவாளி என்பது தமிழர்களின் பண்டிகையே இல்லையென்று குறிப்பிடுகிறார். காரணம் தமிழர்களின் மரபில் இதுபோன்ற விழாவை பார்க்க முடியாது.

வெடி என்பது கி.பி.15 ஆம் நூற்றாண்டு வாக்கில் அறிமுகமாகியது. அதேபோல நரகாசுரன் கதையும் திராவிடர் பண்பாட்டில் காணமுடியவில்லை. பருவநிலையிலும் இந்தப் பண்டிகை தமிழர்களுக்கானதாக தெரியவில்லை.

மேலும் ஆரியப் பண்பாட்டை எதிர்த்த சமணர்களும் தீபாவளிப் பண்டிகையை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். காரணம் அவர்கள் மதிக்கிற மகாவீரர் தன்னுடைய இறப்பை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சமணர்கள் ஆண்டுதோறும் மகாவீரர் இறப்பை தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த அடிப்படையில் எதிர் பண்பாடுகளுக்கு இடையே நடந்த ஒரு அடையாளமாக இந்தப் பண்டிகையைப் பார்க்க முடியும் என்று கருத்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.