பிரதமர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

பிரதமர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

குருநாகல் பொது வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி திட்ட கருத்திட்டத்தை உள்ளடக்கிய பத்திரத்தை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின்போது அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) முற்பகல் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

குருநாகல் மாகாண பொது வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொண்டதன் பின்னர் 2022 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கப்படும் வகையில் வைத்தியசாலையின் ஆரம்பகட்ட நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்குமாறும் பிரதமர் தெரிவித்தார்.

குருநாகல் வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக பெயரிடுவதற்குள்ள தடைகளை நீக்கி, குருநாகல் போதனா வைத்தியசாலை என அறிவிக்குமாறும் பிரதமர் இதன்போது சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.எச்.முணசிங்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.

பிரதமரின் ஆலோசனைக்கமைய விசேட வசதிகளை உள்ளடக்கியதாக புதிய வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும்.

பேருந்தில் வருகைத்தரும் நோயாளிகளுக்காக விசேட பேருந்து சேவை மற்றும் வைத்தியசாலை வளாகத்தினுள்ளேயே பேருந்து நிறுத்தம் அமைத்தல், முதல் முறையாக வைத்தியசாலையொன்று கவர்ச்சிகரமான பசுமை கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படல், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு சேவைகள் போன்றவற்றில் ஒரு போதனா வைத்தியசாலையின் உயர் மட்ட சேவைகளை வழங்குதல், குருநாகல் மாவட்டம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான விகாரைகளை கொண்டிருப்பதன் காரணமாக, அனைத்து வசதிகளுடன் கூடிய பிக்கு வார்டு வளாகத்தை நிர்மாணித்தல் மற்றும் வைத்தியசாலையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலை மற்றும் புகையிரத நிலையத்திற்கு நேரடி அணுகலை வழங்குதல் ஆகியவை பிரதானமாக உள்ளன.

பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சுகாதார அமைச்சு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து பசுமை கருத்திட்டத்திற்கு அமைய வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

பழைய வைத்தியர்களின் உத்தியோகப்பூர்வ இல்லம் அமைந்துள்ள இடம் மற்றும் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பிலான மைதான பூமியை ஒன்றிணைத்து நான்கு ஏக்கரில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 10 மாடிகளை கொண்ட இரு வைத்தியசாலை கட்டிடங்களை முதல் கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முணசிங்க, குருநாகல் மாகாண பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெணிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.