இதை கண்டிப்பாக வாசிக்கவும் - தேவையான உடற்பயிற்சி!

இதை கண்டிப்பாக வாசிக்கவும் - தேவையான உடற்பயிற்சி!

இன்றைய டிஜிட்டல் அவசர உலகத்தில் கணினியின் முன் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை பார்க்கும் பதின்ம வயதினரை சோம்பேறித்தனம் உடன் பிறப்பு போல ஒட்டிக் கொண்டுள்ளது. பெரும்பாலான பதின்ம வயதினர் கணினி திரையின் முன் உட்கார்ந்துகொண்டு விடியோ கேம் விளையாடுவதற்கு மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழிக்கின்றனர். உடலைப் பராமரிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

உடல் உழைப்பு இல்லாத வேலைகளைச்செய்யும் அவர்கள், அன்றாடம் தேவைப்படும் பொருள்களை வாங்குவதற்குக் கூட கடைகளுக்குச் செல்வதில்லை. அனைத்தும் ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. உடலுக்கு வேலை கொடுப்பது என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் உடற்பயிற்சி செய்வது தவிர, வேறு எந்தவிதத்திலும் உடல்நலனைக் காப்பாற்ற முடியாத நிலையே இப்போது உள்ளது.

பலவழிகளில் உடற்பயிற்சி!

உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகளை முழுமனதுடன் செய்தாலே போதுமானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடலின் தகுதிக்கேற்ப உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அதாவது, சுறுசுறுப்பான நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங் பயிற்சி, பனிச்சறுக்கு விளையாட்டு, பந்து விளையாடுதல், பாட்மின்டன், நடனப் பயிற்சிகள், நீச்சல் பயிற்சி, பளு தூக்குதல், வேகமாக ஓடுதல், கைகளை இதயத்துக்கு மேல் தூக்கி பயிற்சி செய்தல்,புல்வெளியை வெட்டுதல், தோட்ட வேலைகளைச் செய்தல், தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் கை, கால் தசைகளை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சி செய்வது என உடற்பயிற்சி செய்ய நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. மூச்சை ஆழமாக இழுத்து விடுவதும் கூட சிறந்த உடற்பயிற்சியாகும்.

பயன்கள்:

எந்த உடற்பயிற்சி முறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதுகுறித்த உங்களுக்கேற்ற முன்தயாரிப்பு மற்றும் திட்டமிடுதலை மேற்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்று.

தினசரி உடற்பயிற்சியின் மூலம் சோம்பேறித்தனம், சோர்வு போன்றவை களைந்து புத்துணர்வு பெற இயலும். உடல் எடையைக் குறைக்க முடியும். தேவையற்ற கொழுப்பு கரைந்து தசைகள் வலுவடையும். மூளையில் புதிய செல்கள் வளரும்.

அதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். தோலில்ஏற்படும் சுருக்கங்கள் குறையும்.

உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பசியின்மைக் கோளாறு சீராகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவு நோய் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

எவ்வளவு மணி நேரம் உடற்பயிற்சி?

13 வயது முதல் 18 வயதுக்குள்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று நாள்கள் ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம்.

இதுவரை உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராயிருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அடுத்துவரும் நாள்கள் சிறிது சிறிதாகப் பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை அதிகரிக்கலாம். இப்படி வாரம் ஐந்து நாள்கள் செய்தாலே சிறப்பானது. ஆனால் உடற்பயிற்சி செய்வதை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இருபாலருமே வாரத்திற்கு 1,100 நிமிடங்கள் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

அதிகாலையில் உடற்பயிற்சி!

ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில், வெறும் வயிற்றில் மேற்கண்ட எளிய பயிற்சிகளை செய்யலாம். ஏனெனில் காலையில் தான் அதிக அளவிலான கலோரிகளைத் தொடர்ந்து எரிக்கமுடியும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் விரைவில் கரையும்.

அதிக அளவு உடற்பயிற்சி:

பதின்ம வயதினர் தங்களது தோற்றத்தை மேம்படுத்துவதற்காக ஒல்லியாக அல்லது ஒரு குறிப்பிட்ட உடல் அமைப்பைப் பெறுவதற்காக அதிகப்படியான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற்பயிற்சி செய்வதையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். உடலின் தேவைக்கு அதிகமாக உடற் பயிற்சி செய்வது, தேவையில்லாத பின்விளைவுகளை, உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இளைய தலைமுறையினரிடையே உடல் பருமன் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தாலும், தேவையான அளவு உணவு, தேவையான அளவு உடற்பயிற்சி செய்தால், உடல் பருமன் பிரச்னையை எளிதில் தீர்க்க முடியும்.