கண்ணே கம்ப்யூட்டர் வேண்டாம்

கண்ணே கம்ப்யூட்டர் வேண்டாம்

குழந்தைகள் வளர தொடங்கியதும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அவற்றுள் பார்வை திறனுக்கு வலு சேர்க்கும் உணவுகளும் இடம்பெற வேண்டும்.

 

கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கேம்கள் விளையாடுவதுதான் பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. அவற்றுடன் அதிக நேரம் செலவிடுவது உடல் நலன், மன நலனுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் கேடானவை.

சிறுவயது முதலே கண்பார்வை திறனை சரியான முறையில் மேம்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தையின் பார்வை திறனை பெற்றோர் கண்காணித்து வருவது அவசியமானது. அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பத்தில் சிறிய அளவில் தென்படும் பார்வை குறைபாட்டு பிரச்சினைக்கு கண்ணாடி அணிய கூச்சப்பட்டு மங்கலான பார்வையை நிரந்தரமாக பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

 


குழந்தை பிறந்ததுமே அதன் பார்வை திறனை மேம்படுத்துவதற்கான விஷயங்களை செய்ய தொடங்கிவிட வேண்டும். ஒரு போதும் குழந்தையின் அறைக்குள் பிரகாசமான விளக்குகளை தொங்கவிடக்கூடாது. குழந்தையின் முகத்திற்கு நேராகவும் விளக்குகளை எரியவிடக்கூடாது. செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை அதன் அருகில் வைத்து பயன்படுத்தக்கூடாது. 5 முதல் 8 மாத குழந்தை களாக இருந்தால் தொட்டிலில் பொம்மை மற்றும் கண்கவர் உருவங்களை தொங்கவிடலாம். அது குழந்தையின் பார்வை திறனை மேம்படுத்த உதவும். அவ்வப்போது வெளி இடங்களுக்கும் குழந்தையை தூக்கி செல்ல வேண்டும். அப்போது தன்னை சுற்றி இருக்கும் பொருட்களை கூர்ந்து கவனிப்பார்கள். அதுவும் அவர்களின் பார்வை திறனை மெருகேற்ற உதவும்.

குழந்தைகள் வளர தொடங்கியதும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அவற்றுள் பார்வை திறனுக்கு வலு சேர்க்கும் உணவுகளும் இடம்பெற வேண்டும். பச்சை காய்கறிகளை அதிகமாக கொடுக்க வேண்டும். அதில் இருக்கும் ஜியாசாந்தின், லூடின், துத்தநாகம் போன்றவை கண்புரை அபாயத்தை குறைக்க உதவும். முட்டையின் மஞ்சள் கருவிலும் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிகுதியாக காணப்படுகிறது. அவையும் கண்புரையில் இருந்து பாதுகாக்கும். பாதாம் பருப்பில் வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளில் பாதி தேவையை இதுவே பூர்த்தி செய்துவிடும். அதனால் பாதாமை தவறாமல் சாப்பிட்டு வருவது நல்லது.