அனைவருக்கும் 2,000 ரூபாவை பெற்றுக் கொடுக்க வேண்டும்!
ஹட்டன், டிக்கோயா கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கும் சட்டம் காரணமாக வருமானத்தினை இழந்துள்ள அனைவருக்கும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். எவருக்கும் பாராபட்சம் காட்டக்கூடாது என டிக்கோயா பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
தனிமைப்படுத்தல் சட்டம் காரணமாக வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்க நிகழ்வு இன்று (28) டிக்கோயா அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் வருமானம் இழந்த பல குடும்பங்களின் பெயர்கள் கிராம சேவகர் வைத்திருந்த பெயர் பட்டியலில் இல்லாததன் காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதனால் கொடுப்பனவுகள் வழங்காது பிரிதொரு தினத்தில் மீண்டும் பெயர் பட்டியலை சரி செய்து வழங்க போவதாக தெரிவித்து கிராம சேவகர் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டார்.
இதனால் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது. இது குறித்து கிராம சேவகரிடம் கேட்ட போது அரசாங்கம் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும் தற்போது அதிகமானவர்கள் தொழில் இழந்தவர்கள் காணப்படுவதாகவும் இதனால் இவர்களையும் இணைத்துக்கொண்டு பெயர்பட்டியலை புதுப்பித்து மீண்டும் இந்த கொடுப்பணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கிராம சேவகர் தெரிவித்தார்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில், இங்கு வந்திருக்கும் அதிகமான குடும்பங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக தொழிலை இழந்து சாப்பிட கூட வழியின்றி இருப்பவர்கள். பல குடும்பங்களின் குடும்ப தலைவன் கொழும்பில் வேலை செய்துவருபவர்கள் ஆனால் இன்று அவர்களும் தொழிலை இழந்து வீடுகளில் தான் வாழ்கிறார்கள் இப்போது எங்களது குடும்பங்களில் எவரும் வேலையின்றி மிகவும் துன்பப்படுகின்றனர்.
இந்நிலையில் கிராம சேவகர் ஒரு சிலருக்கு மாத்திரம் இந்த 2,000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க முற்படுகிறார். கேட்டால் கொழும்பில் வேலை செய்பவர்களுக்கு இல்லை. கணவன் வரவேண்டும். இல்லாவிட்டால் கொடுப்பனவு கிடையாது. என்றெல்லாம் சொல்கிறார். அப்படி நாங்கள் எப்படி சாப்பிடுவது சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி உயிர்வாழ்வது என்று இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த பெயர் பட்டியல் ஒரு சிலரின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்டதாகவும் இதில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் உள்ளடங்கவில்லை என்றும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எது எவ்வாறான போதிலும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அதிகமான கிராம சேவகர் பிரிவுகளில் ஏனைய பிரதேசங்களை விட சுமார் 5 ஆயிரம் 6 ஆயிரம் குடும்பங்கள் வரை வாழ்கின்றனர். எனவே, ஏனைய பிரதேசங்களை விட தொழில் இழந்தவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகமாகும். இவ்வாறான ஒரு நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுத்தால் அது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆகவே, பொறுப்பு வாய்ந்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தலையிட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.