ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நபர்

ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நபர்

மட்டக்களப்பு சந்திவெளியையும் திகிலிவெட்டையையும் இணைக்கும் ஆற்றை கடக்க முற்பட்ட விவசாயி ஒருவர் குறித்த ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியராசா மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வழமைபோல ஆற்றை சந்திவெளியிலுள்ள பாதையின் ஊடாக கடந்து திகிலிவெட்டை பிரதேசத்திலுள்ள வயலுக்கு சம்பவ தினமான இன்று (27) காலை சென்று அங்கிருந்து மாலை 4 மணிக்கு மீண்டும் வீடு திரும்பிய போது வலிப்பு ஏற்பட்டதையடுத்து பாதையில் இருந்து தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.