மங்கள சமரவீரவின் பூதவுடல் மீதான இறுதிக் கிரியைகள் பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது
கொவிட்-19 தொற்றுறுதியாகி, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், இன்று முற்பகல் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பூதவுடல் மீதான இறுதிக் கிரியைகள், பொறளை பொது மயானத்தில் இன்று மாலை இடம்பெற்றன.
கடந்த 13ஆம் திகதி கொவிட்-19 தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தமது 65ஆவது வயதில் அவர் உயிரிழந்தார்.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பிறந்த மங்கள சமரவீர, 1983 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடாக தமது அரசியல் பயணத்தினை ஆரம்பித்திருந்தார்.
இதனையடுத்து அவர் 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மங்கள சமரவீர நிதி, வெளிவிவகாரம் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளின் முன்னாள் அமைச்சராக செயற்பட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.