பொது மக்களுக்காகவே கொவிட் 19 ஏற்பாடுகள் சட்டமூலம்
சுனாமி காலப்பகுதியில் பொது மக்கள் தமது வழக்குகளை உரிய காலப்பகுதியில் நிறைவு செய்து கொள்வதற்கு முடியாமல் போன சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் தலையிட்டு அதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்ததாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
COVID 19 விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்காக இந்த நகல் சட்டமூலம் கொண்டு வரப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதற்காக சட்டத்தரணிகள் சங்கம், வங்கியாளர்கள் சங்கம், வர்த்தக சபை மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் கருத்துகளும், யோசனைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. தமது வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த சட்டமூலம் துணை புரிகின்றது. என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன: கொவிட் தொற்று நிலைமையில் வளங்களின் குறைபாடு எமது நாட்டில் மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். மரணங்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன: கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விடயத்தில் இலங்கை கடுமையான மட்டத்தில் காணப்படுகிறது.
மிக விரைவில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று விசேட வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சில நகரங்களை நகரவாசிகள் மூடும் நிலை காணப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ : அன்று நான் கூறியதை பொருட்படுத்தாமல் அரசாங்கம் செயல்பட்டது. இன்று நாட்டின் நிலை என்ன? இராஜதந்திர மட்டத்தில் வெளிநாட்டு தூதரகங்களின் ஆதரவைப் பெற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறை செயற்பாடு குறித்து குறிப்பிட்ட அவர் ஒன்றரை ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ளது. அதனை செயற்படுத்தி அனர்த்த நிலைமையில் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு செயல்படும் சுகாதாரத் துறை, பாதுகாப்புப் படைகள் மற்றும் அரச சேவையின் பிற துறைகள் விசேடமாக பாராட்டப்படல் வேண்டும். இந்த தருணத்தில் ஆட்சியாளர்கள் மனித நேயத்துடன் செயற்பட வேண்டும்.
இச் சந்தர்ப்பத்தில் உடனடியாக கடன் முகாமைத்துவம் செய்யப்படல் வேண்டும். இல்லாத பட்சத்தில் இலங்கை வங்குரோத்து நிலைக்குச் செல்லக்கூடும் அத்தகைய நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)