வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள கொவிட் தொற்றாளர்களுக்கு சுகாதார பிரிவின் ஆலோசனைகள்
கொவிட்-19 தொற்று உறுதியானவர்களை வீடுகள் தங்க வைத்து சிகிச்சையளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும் சிறந்த காற்றோட்டத்தை பெறுவதினால் விரைவில் குணமடைவார்கள் என சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் தற்போது வீடுகளிலேயே உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்நிலைமைகளுக்கு மேலதிகமாக கடுமையான நோய் நிலைமை காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அவ்வாறான தொற்றாளர்கள் உடல் நிலையை சீராக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், வழமையான உணவுகள் மாத்திரமின்றி பழங்கள் மற்றும் அதிகளவான நீர் என்பவற்றை பெறுதல் வேண்டும் எனவும் சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.
வீடுகளில் சிறந்த முறையில் காற்று வரக்கூடிய வகையில் யன்னல்களை திறந்து வைப்பதனால் வைரஸ் தொற்று ஏனையோருக்கு பரவுவதை தவிர்க்க முடியும்.
அத்துடன் உடல் சோர்வடையும் வகையிலான செயற்பாடுகளை தவிர்த்து கொள்ள வேண்டும் என்பதுடன், அவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக உடலில் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.