30 வயதுக்கு மேற்பட்டோருக்கு எந்தவொரு இடத்திலும் முதலாம் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு எந்தவொரு இடத்திலும் முதலாம் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றல் மற்றும் எதிர்காலச் செயற்றிட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடும் கொவிட் தடுப்பு விசேட செயலணியுடன், இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்று அறிகுறிகள் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட சில பிரதான நகரங்களில் உள்ள வைத்தியாசாலைகளுக்கு நாளாந்தம் செல்கின்ற நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளன. 

அவ்வாறு நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகைதரும்போது ஏற்படும் நெரிசல் காரணமாக எந்த நோயாளர்களும் அசௌகரியத்துக்கு உள்ளாக இடமளிக்க வேண்டாம் எனவும் வைத்தியசாலை பிரதானிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

செல்லும் நோயாளர்களின் தொற்றை உறுதி செய்துகொள்ளும் போது ஏற்படுகின்ற நெரிசல் காரணமாக, அவர்கள் சங்கடங்களுக்கு ஆளாகக் கூடாதென, ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சில பிரதான நகரங்களுக்கு அருகில், மேலதிக சிகிச்சை நிலையங்கள் பலவும், கடந்த மாதங்களுக்கு முன்னரே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எந்தவோர் அவசர நிலையிலும் தொற்றாளர்கள் அசௌகரியத்துக்கு ஆளாவதைத் தடுப்பதற்காகவே அந்த நிலையங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நோய் அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள், முதலாவதாக மேலதிக சிகிச்சை நிலையங்களுக்கும் பின்னர் நோயாளியின் நிலைமையை அவதானித்து வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைப்பதன் அவசியத்தையும், ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

வைத்தியசாலைகளில் பொதுமக்கள் சங்கடத்துக்கு ஆளாவதைத் தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றைத் திட்டமிடுவதற்கு, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் நேரடியாகப் பங்களிப்புச் செய்யவேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும், செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் இரண்டு தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.