கொரோனா எமக்கு ஒரு சவாலே அல்ல: வீராப்பு பேசும் பவித்திரா
வைரஸ் நாட்டுக்குள் பரவாமல் தடுப்பதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு - புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக இனங்காணப்படுபவர்களிடம் இருந்து சமூகப் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக ஒழிப்பதற்கான சவாலை பொறுப்பேற்று நாட்டை அந்த சவாலிலிருந்து மீட்டெடுத்துள்ள எமக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் நோயாளர்கள் இனங்காணப்படுகின்றமை பாரிய சவால் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட அறிவித்தலொன்றை விடுக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்,
கந்தக்காட்டில் உள்ள போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரை 250 இற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
சமூகத்தினுள் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக ஒழிப்பதற்கான சவாலை பொறுப்பேற்று நாட்டை அந்த சவாலிலிருந்து மீட்டெடுத்துள்ள எமக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் நோயாளர்கள் இனங்காணப்படுகின்றமை பாரிய சவால் அல்ல என்பதை நாட்டு மக்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைரஸ் நாட்டுக்குள் பரவாமல் தடுப்பதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா ஒழிப்பிற்காக அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமைய ஏனைய நாடுகளுக்கு சமாந்தரமாக எமது நாட்டில் சமூகத்தில் நோயாளர்கள் இனங்காணப்படுகின்றமை மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.
கந்தக்காடு - புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். எனினும் அதனை அந்த நிலையத்திலிலேயே கட்டுப்படுத்தி சமூகத்தினுள் பரவுவதற்கு இடமளிக்காத வகையில் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.