புதிய அரசில் பலமான அமைச்சு பதவிகளை பேரம் பேசி பெற கூட்டமைப்பிற்கு மக்கள் ஆணை தேவை – சுமந்திரன்
புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தினை அமைச்சுக்கள் என்னவிதமான அதிகாரங்கள் என்பனவற்றினை பேரம்பேச எமக்கு பலம் இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வொன்றினை பேச்சின் மூலம் பெறுவதற்கு எமது பேரம்பேசும் சக்திக்கு தடையாக இருக்கும் என்ற காரணத்தினால் கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் சேரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடமராட்சியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அபிவிருத்திக்காக செயற்பட வேண்டும் என்பதற்கு தான் இணங்குவதாகவும் கூறினார்.
ஆனால் அரசியல் தீர்வு ஒன்று எப்பொழுதுவரும் என கூற முடியாது என்றும் ஜனநாயக சூழலில் காத்திருந்து பேச்சு மூலம் பெறமுடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
வடக்கு கிழக்குக்கான மாற்றுப்பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாரம்பரிய தொழில்களை நவீனமயப்படுத்தல், புதிய தொழில்நுட்ப ரீதியில் நவீன உலகில் வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பது மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் கூறினார்.
அரசியல் உரித்துக்களை பெறவேண்டும் என்றும் அவ்வாறு உரித்துகளை பெற்று பொருளாதார விடயங்களை நாமே கையாலாம் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.