அதிகாரத்திற்கு வரமுன்னதாகவே வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் – ரணில் பெருமிதம்
மின்சாரக் கட்டணத்திற்கு எமது அரசாங்கத்தில் நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுப்போம் என்று அண்மையில் நான் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு சலுகைகளை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆகவே தான் அதிகாரத்திற்கு வரமுன்னதாகவே வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி வைத்திருக்கிறேன் என்றும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுத்தருவேன் என்று ம் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், உலக சந்தையின் எரிபொருள் விலைக்கு அமைவாகவே மின்சாரக்கட்டணம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் எரிபொருள் விலை உலக சந்தையில் 50 சதவீதம் வரையில் குறைவடைந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறிருக்க அந்த நிவாரணத்தை ஏன் நாட்டுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலை ஒருசில மாதங்களில் முடிவிற்கு வராது என்றும் மாறாக இது மீண்டெழுவதற்கு சுமார் இருவருடங்களாகும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகையதொரு சூழ்நிலையில் மக்களால் அவர்களது வாழ்க்கையைக் கொண்டுநடத்த முடியுமா என்ற கேள்வி எழுகின்றது என்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அதேவேளை, மக்களின் பொருளாதார இயலுமையையும் வலுப்படுத்தக்கூடிய ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாத்திரமே இருக்கின்றது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.