சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவரும் யாழ்ப்பாணம் அம்மன்னீல் கோட்டை

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவரும் யாழ்ப்பாணம் அம்மன்னீல் கோட்டை

இலங்கையில்  ஐரோப்பியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பல கோட்டைகளில் இந்த அம்மன்னீல் கோட்டை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. அதற்கு பிரதான காரணம், கடலின் மத்தில் அமைந்துள்ளதும் இக்கோட்டையின் அழகிய தோற்றமுமாகும். 17 ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்களால் யாழ்ப்பாண மாவட்டதில் காரைநகர்த் தீவுக்கும்,வேலணை என்ற தீவுக்கும் இடையில் மத்தியக் கடலில் இக்கோட்டையானது கட்டப்பட்டுள்ளது. ஒடுங்கிய கடல் நிலப்பகுதியிலுள்ள சிறிய மணற்திட்டு ஒன்றில் அமைந்துள்ள இக்கோட்டையானது,  ஊர்காவற்துறை கடற்கோட்டை, அம்மன்னீல் கோட்டை போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

அம்மன்னீல் கோட்டையின் முகப்பு
படஉதவி : sundayobserver.lk

யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர்களின் ஆதிக்க சின்னமாக காணப்படும் இக்கோட்டையானது 17ஆம் நூற்றாண்டில் அமிநால் டெமன்சில் என்ற போர்த்துக்கேய தளபதியால் கட்டப்பட்டுள்ளது என்கிறது வரலாற்றுக்கு குறிப்புக்கள். 

பண்டைய காலம் தொட்டே இலங்கையின் வடக்குப் பகுதியில் பிரசித்தி பெற்ற துறைமுகமாக ஊர்காவற்றுறை திகழ்துள்ளது. கடல்வழிப் பயணம் செய்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் இடமாகவும் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்யும் இடமாகவும் இக்கோட்டை பயன்பட்டுள்ளது. பின்நாட்களில் தொல்லியல் திணைக்களப் பொறுப்பில் இருந்த இக்கோட்டையானது பிரித்தானியர்களின் ஆட்சியில் ஆயுள்தண்டைக் கைதிகள் சிறைப்படுத்தப்பட்ட இடமாகவும் செயற்பட்டுள்ளது. பின்நாட்களில் சிறிது காலம் சுங்கப் பரிசோதனை நிலையமாகவும் இக்கோட்டை விளங்கியுள்ளது. 

அம்மன்னீல் கோட்டையினுள் சிறைச்சாலை முறையில் அமைக்கப்பட்டுள்ள விடுதி
படஉதவி : tripadvisor.com

அக்காலத்தில் கோட்டையில் அமைக்கப்பட்ட சிறைச்சாலைகள்
படஉதவி : dreamstime.com

சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள இடம் 
படஉதவி : dreamstime.com

எட்டுபக்க சுவர்களைக்கொண்டு பல்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டையின் பிரதான நுழைவாயிலானது தெற்கு திசையில் அமைந்துள்ளது. வடகிழக்குப் பக்கச் சுவரில் முக்கோண வடிவிலான ஒரு நீட்சி காணப்படுகிறது. மற்றும் இக்கோட்டையானது சிறைச்சாலையாக செயற்பட்டதன் சான்றுகளும் இங்கு காணப்படுகின்றது. ஒல்லாந்தர் காலத்திலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சில கட்டிடங்கள் இருந்ததாகவும் பின்நாட்களில் அவைகள் இடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. 

இரவு நேரத்தில் அம்மனீல் கோட்டை
படஉதவி : twitter.com

இலங்கையில் பல்வேறு இடங்களில் காணப்படும் சுற்றுலாத் தளங்கள் போலவே, இந்த அம்மன்னீல் கோட்டையும் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகின்றது. இரவு நேரங்களிலும் இந்தக் கோட்டையானது பெருங்கடலில் ஏற்றப்பட்ட சிறுதீபம் போல பார்ப்பவர்களின் கண்கவர்ந்து வகின்றது. சுற்றுலா பயணிகள் இக்கோட்டையினுள் செல்வதற்கு பாதுகாப்புப் படையினரிடம் முன்பாகவே அனுமதி பெறவேண்டும். இதனுள் சிறைச்சாலை போன்று அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதிகள் இங்கு செல்பவர்களுக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை. சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த அம்மன்னீல் கோட்டையைப் போன்றே இலங்கையின் மற்றைய வரலாற்று பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.