கொரோனாவால் ஸ்ரீலங்கா முழுதும் 13,575 பேருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை
கொரோனா தொற்று காராணமாக நாட்டில் 546 தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தனியார் பிரிவைச் சேர்ந்த சுமார் 13,575 பேர் தமது தொழிலை இழந்துள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொடுக்காத 381 தொழிற்சாலைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நிலங்க வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிற்சாலைகளில் 2,700 க்கும் அதிகமானோர் பணிபுரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முறைப்பாடுகள் தொடர்பில் ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்ட 782 ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனியார் பிரிவில் சேவையாற்றும் ஊழியர்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தொழில் திணைக்களத்தில் ஆணையாளர் நிலங்க வீரக்கொடி தெரிவித்துள்ளார்.