தமிழருக்கும் சிங்களவருக்கும் தமிழ் பெண்ணே தாய்: தேரருக்கு காட்டமான பதில்
இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த உண்மை வரலாற்றை பௌத்த குருமார் உட்பட எவராவது மறுப்பார்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
தற்போது ஆலயங்கள் பௌத்த விகாரை என பௌத்த தோர்கள் தெரிவித்து வருவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டனம் தெரிவித்து இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக இலங்கையின் எந்த பகுதி யாருக்கு சொந்தம்? யார் பூர்வீக குடிகள்? என்று சரித்திரம் தெரியாதவர்கள் மாறி மாறி அறிக்கைவிடுகின்றார்கள். ஆனால் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதியிடப்பட்ட மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ (அப்போதைய ஜனாதிபதி) அவர்களுக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்ட “நிரந்தர தீர்வு கோரும் ஒரு தேசாபிமானியின் துணிச்சல் மிக்க கோரிக்கை” என்ற தலைப்பைக் கொண்ட கடிதத்தின் ஒரு பகுதியினை கீழே குறிப்பிடுகின்றேன்.
சிங்கள மக்களின் பூர்வீக தொடர்பு
ஜனாதிபதியே நாம் காலவரையறை இன்றி இவ்வாறு செல்லமுடியாது. மேலும் தாமதியாது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையில் வாழும் பல்வேறு சமூகத்தினரும் தம் மத்தியிலுள்ள சந்தேகங்களை களைந்து ஒன்று பட்டு ஒரே தளத்தில் நிரந்தரமான ஒரு தீர்வுக்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் வாழும் இரு பெரும்பான்மை சமூகத்தினர் நீண்ட காலமாக ஒருவர் மீது ஒருவர் கொண்ட அவநம்பிக்கை வளர்ந்தமைக்கு முக்கிய காரணம் எமது நாட்டின் வரலாற்றில் நடந்தேறிய சில முக்கிய சம்பவங்கள் பற்றி அறிந்திருக்காமையே. தன்னுடைய விளைவு ஒரு குழுவினர் மற்றய குழுவினரை சந்தேக கண்கொண்டு பார்ப்பதே நீண்டகாலமாக நடந்து வருகின்றது.
இந்த நாட்டில் சனத்தொகையில் எத்தனை வீதத்தினர் தமிழ், சிங்கள மக்களின் பூர்விக உறவு பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர்?
எம்மில் அனேகருக்கு தெரிந்தவகையில் விஜயன் என்ற இளவரசன் பாண்டிய நாட்டு இளவரசியை மணமுடித்ததும், அதே போன்று அவனது தோழர்கள் 700 பேருக்கு அவரவர் தகுதிக்கு பொருத்தமான பெண்களை பாண்டிய நாட்டு மன்னன் திருமணம் முடித்து அனுப்பிவைத்ததும் மட்டுமே. ஆனால் சிங்கள மக்களின் பூர்வீக வரலாற்றை எடுத்துக் கூறம் 'மகாவம்சம்' என்ற புத்தகத்தில் 7ம் அத்தியாயத்தின் ஒரு பகுதியை கீழே தருகின்றேன்.
'பாண்டிய மன்னன் தனது மகளாகிய அரசகுமாரியையும், அவளுக்கு உரித்தான ஆபரணங்கள், அவர்களுக்கு தேவையான பல்வேறுபட்ட பொருட்கள், விஜயனின் தோழர்களின் தகுதிக்கேற்ப தெரிவு செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நட்ட ஈட்டை கொடுத்து அழைக்கப்பட்ட பெண்கள், யானைகள், வாகனங்கள், அரசருக்குரிய தரமான பொருட்கள், பல்வேறு கைவினை கலைஞர்கள், 18 வகையான தொழில் புரியும் ,னக் குழுக்களைச் சேர்ந்த 1000 குடும்பத்துடன் ஒரு கடிதத்தையும் மன்னருக்கு அனுப்பியிருந்தார்.
இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களோடு தமக்குள்ள தொப்புள்கொடி உறவுபற்றி பிரமாதமாக பேசுவதனைப் போன்று, இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு.
சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது