மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்
நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பமாகின.
இதன்படி 14 தூரப் பயண தொடருந்துகள் மாகாணங்கள் கடந்த சேவைக்காக இயங்கவுள்ளன.
கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையில் 4 தொடருந்து சேவைகளும், கோட்டையிலிருந்து ரம்புக்கனை, மஹவ, சிலாபம் ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையில் 2 தொடருந்துகளும் இயங்கவுள்ளன.
மருதானை மற்றும் காலிக்கு இடையில் இரண்டு தொடருந்துகள் இயங்கவுள்ளதாகவும் மருதானை - வெலியத்த ஆகிய நகரங்களுக்கு இடையில் ஒரு தொடருந்து இயங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே இந்த தொடருந்து சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
அதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக 500 பேருந்துகள் இன்று முதல் இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதேபோன்று தனியார் பேருந்துகளும் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான சேவையை ஆரம்பிக்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.