இலங்கை உட்பட 6 ஆசிய நாடுகளுக்கு ஜப்பானிடமிருந்து அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்
இலங்கை உள்ளிட்ட 6 ஆசிய நாடுகளுக்கும் பசுபிக் பிராந்திய நாடுகளுக்கும் 11 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை நன்கொடையாக அளிக்க, ஜப்பான் தயாராகவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) தெரிவித்துள்ளார்.
கோவெக்ஸ் பங்கீட்டு திட்டத்தின் கீழ் இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, ஈரான், லாவோஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இதனைவிட, இந்தோனேஷியா, தாய்வான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கமைய தலா ஒரு மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை நாளை மறுதினம் அனுப்பிவைப்பதற்கு ஜப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜப்பானில் உற்பத்திசெய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ள நிலையில், கோவெக்ஸ் திட்டத்தில் இந்த தடுப்பூசிகளை இணைத்துக்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த 9 ஆம் திகதி அனுமதி வழங்கியது.
அவ்வாறே, கோவெக்ஸ் திட்டத்துக்காக, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி மற்றும் 30 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதாக ஜப்பான் அரசு உறுதியளித்துள்ளது.