ஸ்ரீலங்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பம் - நவீன் டி சொய்சா எச்சரிக்கை
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்ரீலங்காவிற்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், தினமும் 5 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளையாவது நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
மாரவிலவில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் முதல் குழுவினர் அந்த பிரதேசத்தில் கண்டறியப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொடர்ந்தும் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். எதிர்காலத்தில் மேலும் கொரோனா நோயாளிகள் அங்கு அடையாளம் காணப்படலாம்.
இரண்டு தினங்களில் மாத்திரம் 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொரோனா நோயாளிகளின் சமூக நடமாடல் எங்கு ஆரம்பித்தது, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியேறியவர்கள், வந்தவர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
இந்த நிலைமையை எப்படியாவது கட்டுப்படுத்தாவிட்டால், நிலைமை மோசமாக மாறக் கூடும் எனவும் நவீன் டி சொய்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.