சட்டவிரோத கருக்கலைப்பு - தாயும் சிசுவும் பலி
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவில் உள்ள வீடொன்றில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய சுப்பிரமணியம் காஞ்சனா என்பவரே இவ்வாறு இன்று (12) காலை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், குறித்த வீட்டினை சோதனை செய்த போது, அவ்வீட்டில் கூடை ஒன்றில் இரத்த கரைபடிந்த ஆடைகள் இருந்ததையும், அதனுடன் இணைந்ததாக சுமார் 7 மாதங்கள் மதிக்கதக்கதான பெண் சிசுவொன்றின் சடலம் இருந்துள்ளதையும் பொலிஸார் கண்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இடம்பெற்ற கருக்கலைப்பின் போது இவ்விரு உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், கருக்கலைப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 35 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வருகைத் தந்துள்ளதுடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்று, பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.