ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது

ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கேரள கஞ்சா, ஐஸ் போதைப் பொருள் என்பவற்றுடன் போதை பொருள் வியாபாரிகள் இருவர் உட்பட 5 பேர் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து ஒரு கிலோ 850 கிராம் கஞ்சா மற்றும் 202 கிராம் ஐஸ் போதைப் பொருள்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து நேற்று (10) இரவு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் வாழைச்சேனை, செம்மண்ஓடை பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்ட போது வியாபாரத்துக்காக மன்னார் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ 850 கிராம் கேரள கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியையும் கைது செய்தனர்.

அதேவேளை வாழைச்சேனை பகுதியிலுள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் 202 கிராம் 650 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 21 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.