எமது மண்ணை கள்ளனும் காவாலியும் குடிகாரனும் ஆளவேண்டிய சூழ்நிலை வந்தால் அதன் பழியை ஏற்க வேண்டும்!
இறுதி யுத்தத்தை காட்டி கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாறையில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். கணேஷ் கேள்வியெழுப்பினார்.
நேற்று மாலை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறிலின் அழைப்பின் பேரில் காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது மண்ணை கள்ளனும் காவாலியும் குடிகாரனும் ஆளவேண்டிய சூழ்நிலை வந்தால் அதன் பழியை எமது சமுதாயம் ஏற்க வேண்டும்.
எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தளவில் உலகளாவிய ரீதியில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதில் சிலவற்றை ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஆனால் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தளவில் நாம் யாரையும் கொலை செய்யவில்லை கப்பம் பெறவில்லை களவு செய்யவுமில்லை. இவ்வாறான காரியங்களில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுபடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது நோக்குவது எமது மண், நாங்கள் வாழ்ந்த மண் நமக்கு வேண்டும்.
நமது மொழி பாதுகாக்கப்பட வேண்டும் எமக்கான அரசியல் வளம் எம்மை நாமே ஆளக்கூடிய அரசியல் வளம் நமது கலாச்சார விழுமியங்கள் சார்ந்த வாழ்வியல் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாக வைத்தே நமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நாங்கள் அரசியலில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று பாதைகளை போட்டு மின் விளக்குகளை பொருத்தி எமது மக்களை திருப்திப்படுத்தவில்லை நமது மண்ணை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. எமது இனத்தினுடைய வலியை நாம் அறிந்திருக்க வேண்டும். இதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
இவை அனைத்தையும் நாங்கள் தகர்த்தெறிந்து விட்டு மாற்று இனத்தவர்களோடு சேர்ந்து எமது மண்ணையும் மொழியையும் நாங்கள் அழிக்க விரும்பவில்லை.
குறிப்பாக கடந்த 30 வருட யுத்த சூழ்நிலையில் ஏறத்தாள எமது விடுதலைப்போராட்டத்தில் 49 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் இந்த மண்ணிலே புதையுண்டார்கள். 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தபுதாரர்களானார்கள். 99 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சத்து 46 ஆயிரத்து மேற்பட்டோர் இதுவரையும் காணாமலாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அம்பாறையில் 1416 பேர் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தமிழ் மக்கள் இல்லையா இவற்றுக்கெல்லாம் நாம் எமது தமிழ் தேசியக்கூட்டமைப்பு வகை சொல்லாமல் மாற்று இடத்தில் போய் இருப்பது இவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும்.
இந்த மக்களின் கண்ணீரை துடைப்பது யார் இதற்காகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற வீட்டுச் சின்னத்தில் வந்து உங்கள் வாக்கை கேட்டு உங்கள் சக மனிதனாக இந்த சமுதாயத்தை வழிநடத்த கூடியவனாக உங்களிடத்தில் வந்திருக்கின்றோம் .
கடந்த முறை பெற்ற வாக்குகளை விட நாங்கள் குறைவான வாக்குகளை பெற்றால் அதாவுல்லா சொன்னதைப் போன்று தமிழ் மக்கள் பைல்களை தூக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. இதை ஏற்படுத்த போகின்றவர் யார் என்று நீங்கள் அறிந்து பார்க்க வேண்டும்.
அவர்களுக்கு வாக்களித்தால் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு அதாவுலாவிற்கு பின்னால் பைல்களை தூக்க வேண்டிய கடப்பாடு நமக்கு வரும். ஆகவே நேரிய சிந்தனை உள்ள தமிழ் இனமாக நாம் வாழவேண்டும் என விரும்புகிறோம்.
இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்றும் யார் காட்டி கொடுத்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். கர்ப்பத்தில் இருக்கும் பெண்ணின் வயிற்றில் கொல்லப்பட்ட குழந்தைக்கள், இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் குடித்த குழந்தைகளும் இன்றும் வலிகளை சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆகவே இந்த குழந்தையின் வாழ்க்கைக்கு நாங்கள் என்ன சொல்ல வேண்டும்? அமைச்சுப் பதவிகளை பெற்று அரசாங்கத்தின் பின்னால் சென்றால் அந்த குழந்தையின் வலிக்கு நாங்கள் என்ன சொல்ல போகிறோம்? என சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த மக்கள் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் தவராசா கலையரசன்,எஸ். ஜெயராணி கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.