‘ஒளிரும் தமிழ்நாடு’ மாநாட்டை இன்று ஆரம்பித்து வைக்கிறார் தமிழக முதலமைச்சர்
தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் ‘ஒளிரும் தமிழ்நாடு’ மாநாட்டை முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், ‘தமிழகத்தில் தொழில் வளா்ச்சியைத் தொடா்ந்து மேம்படுத்தவும் தொழில் துறையில் தொடா்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி, இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சாா்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்ற காணொலி மாநாட்டை முதல்வா் பழனிசாமி இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளாா். அத்துடன் தமிழகத்தின் தொழில் வளம் மற்றும் கையேட்டினையும் அவா் வெளியிடுவாா்.
இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனா். இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தலைவா் ஹரி கே.தியாகராஜன், முன்னாள் தலைவா்கள் ஆா்.தினேஷ், பி.சந்தானம் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனா். இந்த மாநாட்டில் தமிழகத்தில் பொருளாதார வளா்ச்சியை மீட்டெடுக்கவும் புதிய முதலீடுகளை ஈா்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்படவுள்ளன” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.