மேலும் சில மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் வேலைதிட்டம் ஆரம்பம்

மேலும் சில மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் வேலைதிட்டம் ஆரம்பம்

நுவரெலியா, மாத்தளை, பதுளை மாவட்டங்களில் இன்று கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளும் மாத்தளை மாவட்டத்திற்கும் 25 ஆயிரம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பரீட்சார்த்த ரீதியில் நேற்று மாத்தளை மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது. மாத்தளை மாநகர எல்லைக்குட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாக மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் இன்று சுகாதாரதுறை சாராத களப்பணிபாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும்.

இதனைத் தொடர்ந்து மாத்தளை மாநகர சபை, தம்புள்ளை மாநகர சபை, ரத்தோட்டை, கலெவெல, உக்குவளை சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார துறை சாராத களப்பணிபாளர்களுக்கு பத்தாயிரம் தடுப்பூசிகளும் பொது மக்களுக்கு 40 ஆயிரம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.எம்.என்.சி.மனதுங்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுகளில் தொற்று அதிகளவில் காணப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, பதுளை மாவட்டத்திலும் 266 நிலையங்களில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேகாலை மாவட்டத்திலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகும். மாவட்டத்திலுள்ள 67 கிராம உத்தியோத்தர் பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.