கணவரை தேடி வீட்டுக்கு வந்த இளம்பெண்: தீக்குளித்து இறந்த மனைவி!
தனது கணவரை தன்னுடைய கணவர் என்று வீட்டுக்கு இளம்பெண் ஒருவர் வந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் 19 வயது இளம்பெண் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் திருச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி எடமலைப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவருக்கும் அவருடைய 19 வயதே ஆன முறைப்பெண் நீலவேணி என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. நீலவேணி கணவருடன் மகிழ்ச்சியுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென இளம்பெண் ஒருவர் அவருடைய வீட்டிற்கு வந்து, தான் விஷ்ணுவின் மனைவி என்றும் நான் தான் முதலில் விஷ்ணுவை திருமணம் செய்ததாகவும் எனவே இங்கேயே தங்க போவதாகவும் கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நீலவேணி தனது பெற்றோரிடமும் உறவினர்களிடமும் கூறியுள்ளார். அவர்களும் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து விஷ்ணு வீட்டுக்கு வந்தவுடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று அனைவரும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் தனக்கு முன்னரே இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் தெரிந்து, துக்கத்தை தாங்க முடியாமல் நீலவேணி திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து கொண்டார். இதனால் அவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான ஒருசில மாதங்களில் 19 வயது இளம்பெண் தீக்குளித்து மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.