பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்
பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை எனத்தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொது முடக்கம் தொடர்ந்தால் பொருளாதாரம் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை – கிண்டியில் அமைக்கப்பட்ட கொரோனா நோய்த் தொற்றுக்கான சிறப்பு மருத்துவமனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர், ‘கொரோனா பரவலைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளித்தால் தான் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. எனவே மக்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் கொரோனா நோய்த்தொற்றை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.
நோய்ப் பரவலைத் தடுப்பதும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை. பொது முடக்கத்தை தொடர்ந்து அமுல்படுத்தினால், வாழ்வாதாரத்தில் பாதிப்பு மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுவிடும்.
எனவேதான், பொது முடக்கம் மூலமாக முடிந்த அளவு நோய்ப் பரவலைத் தடுத்து, மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
பொது முடக்கத்தின் மூலமாக பல சிரமங்கள் ஏற்பட்டாலும், கொரோனா தொற்று பரவல் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மீண்டும் முழு பொது முடக்கம் அமுல்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்’ என்றார்.