அதிகரிக்கும் போர் பதற்றம் : முக்கிய பேச்சுவார்த்தைக்கு தயாராகும் சீனா

அதிகரிக்கும் போர் பதற்றம் : முக்கிய பேச்சுவார்த்தைக்கு தயாராகும் சீனா

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர் பதற்றத்திற்கு நடுவில் இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இரு படைகளிலிருந்தும் லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான அதிகாரிகள் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பார்கள்.

இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற உள்ளது.

முன்னதாக, இரு நாட்டு எல்லை பிரச்சினை தொடர்பாக 10 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

இந்தியாவும்-சீனாவும், 3,500 கி.மீ நீள எல்லையை பரஸ்பரம் கொண்ட நாடுகள். லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் எல்லை பகுதிகளில் சீன துருப்புக்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லையில் வேலி இல்லை என்பது சீனாவுக்கு சாதகமாகிவிட்டது.

பேச்சுவார்த்தையின்போது, இந்திய தரப்புக்கு தலைமை தாங்கப்போவது லெப்டினன்ட் ஜெனரல் ஹர்மிந்தர் சிங். லேவில் 14 வது படைப்பிரிவின் அதிகாரியாக உள்ளார்.

பாங்கோங் த்சோ மற்றும் கால்வன் பள்ளத்தாக்கின் ஆக்கிரமிப்பிலிருந்து சீனா பின்வாங்க வேண்டும் என்று, இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய தரப்பு வற்புறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 5 அன்று இரு தரப்பினருக்கும் இடையிலான வன்முறை மோதலுக்குப் பின்னர் படிப்படியாக பதற்றம் நீங்கி, சீனா கட்டிய தற்காலிக முகாம்களை நீக்கி வருகிறது. இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.