உங்களை காப்பாற்றும் மூன்று வார்த்தைகள் - அட இது தெரியாம போச்சே

உங்களை காப்பாற்றும் மூன்று வார்த்தைகள் - அட இது தெரியாம போச்சே

உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், இந்த செயலியை கொண்டு ஒருவர் இருக்கும் பகுதியை மிக துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

இங்கிலாந்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்ற ஜெஸ் டின்ஸ்லி மற்றும் அவர்களின் நண்பர்கள் ஐந்து கிலோமீட்டர்கள் வட்ட பாதையில் தனியாக சென்று மீண்டும் இணைய திட்டமிட்டனர். ஞாயிற்றுக் கிழமையின் மாலை வேளையில் திட்டம் தீட்டிய நிலையில், இரவு நேரம் நெருங்கும் போது நியூடன் அகில்ப் மட்டும் காட்டினுள் தனியாக சிக்கிக் கொண்டார்.

காட்டினுள் சிக்கிக் கொண்ட நிலையில், போன் சிக்னல் கிடைக்கும் பகுதியை நியூடன் அடைந்தார். அங்கிருந்து தனது போனில் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி வேண்டும் என தெரிவித்தார். மறுபுறம் அழைப்பை எடுத்தவர் நியூடனிடம் மொபைலில் what3words எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய கூறினார்.

செயலி இன்ஸ்டால் செய்த சில நிமிடங்களில் காவல் துறையினர் நியூடன் மற்றும் அவர்களது நண்பர்கள் இருந்த பகுதியை கண்டறிந்து அவர்களை மீட்டனர். what3words செயலி ஒருவர் இருக்கும் இடத்தை மிகத்துல்லியமாக மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 What3words செயலி

இந்த செயலியை உருவாக்கிய டெவலப்பர்கள் பூமி பந்தை 57,00,000 கோடி சதுரங்கங்களாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் பிரத்யேக பெயர் சூட்டி இருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு பகுதியும் பரப்பளவில் பத்துக்கு பத்து சதுர அடி நிலம் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் மூன்று வார்த்தைகள் கொண்ட பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பூமி பந்து முழுக்க பத்துக்கு பத்து சதுர அடி வீதம் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டப்பட்டு இருப்பதால், ஒருவர் எங்கிருந்தாலும் மிக எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இந்த சேவை தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது 40 மொழிகளில் கிடைக்கிறது.

செயலியை பயன்படுத்துவது எப்படி?

- செயலியை இன்ஸ்டால் செய்ததும், அதனை திறந்து சர்ச் பாக்ஸ் பகுதியில் தெருவின் பெயரை பதிவிட வேண்டும். 

- தெருவின் பெயரை பதிவிட்டதும் அந்த பகுதிக்கான மூன்று வார்த்தைகள் கொண்ட முகவரி தெரியும். 

- பின் அங்கு சென்றடைய நேவிகேட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- ஒவ்வொரு முறை பயன்படுத்தும் மூன்று வார்த்தைகள் கொண்ட முகவரி செயலியின் டேஷ்போர்டு பகுதியில் சேமிக்கப்படும்.

- ஒருவர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள செயலியை திறந்து திரையில் காணப்படும் சதுரங்களில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சதுரங்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

- இவ்வாறு செய்ததும், அந்த பகுதிக்கான மூன்று வார்த்தைகள் அடங்கிய பெயரை காண முடியும். 

- இந்த செயலியை ஆப்லைன் மோடில் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.