உலகின் எந்த இடத்திலும், எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இந்திய அணியிடம் உள்ளது: புஜாரா

உலகின் எந்த இடத்திலும், எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இந்திய அணியிடம் உள்ளது: புஜாரா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணி எது? என்பது குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் அடுத்த மாதம் 18-ந்தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து சூழ்நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா மண்ணில் அடுத்தடுத்து தொடர்களை வென்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில் உலகின் எந்த இடத்திலும், எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இந்திய அணிக்கு உள்ளது என நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘நியூசிலாந்து அணியின் ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை குறிப்பிட்டு கூற இயலாது. அவர்களுடைய பந்து வீச்சு சிறந்த பேலன்ஸ் கொண்டது. அவர்களுடைய பந்து வீச்சை போதிய அளவிற்கு எதிர்கொண்டுள்ளோம். அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதற்கான போதுமான ஐடியா எங்களிடம் உள்ளது.

புஜாரா

நியூசிலாந்துக்கு எதிராக கடந்த முறை அவர்களது சொந்த மண்ணில் விளையாடினோம். இரண்டு அணிகளுக்கும் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவதால், அங்கு நடந்தது போன்று நடக்கும் எனக் கூற இயலாது. இரண்டு அணிகளும் சொந்த மைதானத்தின் சாதகத்தை பெற முடியாது.

நாங்கள் எங்களுடைய அடிப்படையை சரியாக அமைத்து விட்டால், உலகின் எந்த இடத்திலும் விளையாடினாலும், எந்த அணியை எதிர்த்து விளையாடினாலும் வெற்றி பெறும் வல்லமை எங்களிடம் உள்ளது’’ என்றார்.