கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்?
கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம் என்று நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்?
நீடாமங்கலம் :
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உணவு மற்றும் சத்தியல் துறை உதவி பேராசிரியர் விஞ்ஞானி கமலசுந்தரி கூறியதாவது:-
நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும், சக்திக்கும், உடல்நலத்திற்கும் மட்டுமின்றி நல்ல உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவில் 6 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் அது கொரோனா வைரசை எதிர்கொள்ள உதவும்.
கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, நல்ல வகையான கொழுப்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடலில் செல்கள் உருவாக புரதம் தேவை. அந்த செல்கள் அழியும் போது அவற்றிற்கு பதிலாக புதிய செல்கள் உண்டாக்க வேண்டும். இந்த செல்கள் நல்ல ஆரோக்கியமாக அமைய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் அமைய நமக்கு மிகவும் அவசியம் இந்த புரதம். அளவு மட்டுமின்றி அதனுடைய தரமான தன்மை மிகவும் அவசியம்.
அதற்கு மாமிச வகை புரதங்கள் அல்லது தானியம் மற்றும் பயறு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது. பால், முட்டை, பயறு வகைகள், இறைச்சி, மீன் போன்ற உணவுகளில் புரதம் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அவருடைய எடைக்கு ஏற்றவாறு ஒரு கிராம் என்ற அளவு ஏற்றபடி உண்ண வேண்டும்.
75 கிலோ உடல் எடை என்றால் 75 கிராம் உண்ண வேண்டும். ஒரு கப் (150 கிராம்) சுண்டல் உண்டால் அதில் ஏழு கிராம் புரதம் கிடைக்கும். ஒரு இட்லியை உணவில் எடுத்துக்கொண்டால் 2 கிராம் புரதம் கிடைக்கும்.
ஒரு கப் பால் எடுத்துக்கொண்டால் 5 கிராம் புரதம் கிடைக்கும். ஆகவே எளிதாக இந்த புரதத்தை நம் உணவுகளில் எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் வித்துக்கள் சேர்த்து எடுத்துக்கொண்டால் நல்ல புரதம் கிடைக்கும்.
வைட்டமின் ஏ சத்து நாம் தினமும் உண்ணும் பழங்கள், காய்கறிகளில் நிறைந்துள்ளன. கேரட், பப்பாளி, கறிவேப்பிலை, மாம்பழம், மஞ்சள் பூசணிக்காய் போன்றவற்றில் இந்த சத்து உள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 800 மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது. நமது உணவில் 200 கிராம் அளவு இந்த பழங்களை எடுத்துக்கொண்டாலே வைட்டமின் ஏ சத்து எளிதாக கிடைக்கும்.
வைட்டமின் சி சத்து உடலில் நல்ல ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை படைத்தது. தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, மாங்காய் போன்ற பழங்களில் உள்ளன. குறைந்தது எலுமிச்சை, நெல்லிக்காய் ஜூஸ் 30 மில்லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி சத்து சூரிய வெளிச்சத்தில் உள்ளது. தினந்தோறும் சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடத்திற்கு மேல் நின்றாலே நமது தோலில் இந்த வைட்டமின் டி சத்து உருவாகி விடும். உணவுகளில் மிகவும் அரிது. மீன் எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே இது உள்ளன. இத்தகைய உணவுகள் 10-ல் இருந்து 15 மி.லி. சேர்த்தால் போதுமானதாகும்.
துத்தநாக சத்து பழுப்பு அரிசி, எண்ணெய் வித்துக்கள், முந்திரி, பூசணிக்காய், கொண்டைக்கடலை போன்ற உணவுகளில் உள்ளன. இந்த தாது உப்பு எதிர்ப்பு சக்தியை வலுவாக்க ஒரு நல்ல சத்தாகும். இது ஒரு நபருக்கு 2 மில்லி கிராம் அளவு தேவைப்படுகிறது. நல்ல சத்தான உணவுகளில் இது உள்ளன. இந்த சத்து ஒரு கப் கொண்டைக்கடலை, சுண்டல் எடுத்துக்கொண்டால் 2.5 மில்லி கிராம் கிடைக்கும். தயிர் போன்றவற்றிலும் இந்த துத்தநாகம் உள்ளது.
கருப்பு சுண்டல், தோல் உளுந்து, ஆளி விதை போன்ற உணவுகளில் கொழுப்பு சத்து உள்ளன. இந்த ஆளி விதைகளை தினந்தோறும் 10 கிராம் அளவு வறுத்து பொடி செய்து நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே இந்த கொழுப்பு சத்து எளிதாக கிடைத்து விடும். இது மட்டுமின்றி நமது உணவுகளில் காரத்தன்மை அதிகமாக இருந்தால் அது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லமை படைத்தது. இதன் அடிப்படையிலேயே கசாயங்கள் போன்றவை உண்பதற்கு வலியுறுத்தப்படுகிறது.
இந்த காரத்தன்மை உணவுகளில் பழங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், மூலிகைகளான துளசி, ஓமவள்ளி, புதினா, வெற்றிலை, பூண்டு, பால் போன்ற உணவுகளில் உள்ளன. மேலும் எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அதனை சூடாக உண்ண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.