அசார் அலி, அபித் அலி சதமடித்து அசத்தல் - 2ம் டெஸ்ட் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 268/4

அசார் அலி, அபித் அலி சதமடித்து அசத்தல் - 2ம் டெஸ்ட் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 268/4

அசார் அலி மற்றும் அபித் அலி ஆகியோர் சதமடித்து அசத்த, ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் நாளில் பாகிஸ்தான் அணி 268 ரன்கள் எடுத்துள்ளது.ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

 

 
முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இம்ரான் பட், அபித் அலி களமிறங்கினர்.

 

சதமடித்ததும் பேட்டை உயர்த்தும் அசார் அலி

 

இம்ரான் பட் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய அசார் அலி அபித் அலியுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்தனர். அணியின் எண்ணிக்கை 248 ஆக இருக்கும்போது அசார் அலி 126 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 236 ரன்கள் குவித்தது.

அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் 2 ரன்னிலும், பவாத் ஆலம் 5 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 90 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. அபித் அலி 118 ரன்னுடனும், சஜித் கான் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஜிம்பாப்வே அணி சார்பில் முசாராபனி 3 விக்கெட்டு வீழ்த்தினார்.