பார்வையற்ற சிறுவனின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சிரந்தி ராஜபக்ஸ!

பார்வையற்ற சிறுவனின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சிரந்தி ராஜபக்ஸ!

கலென்பிந்துனு​வெவ, பலுகொல்லேகம கிராமத்தை சேர்ந்த விழிப்புலனற்ற 13 வயதுடைய ஜீவந்த ரத்நாயக்க என்ற சிறுவனின் கண் பார்வைக்கான கோரிக்கை சமூக வலைத்தளம் ஊடாக பிரதமரின் இளைய மகனான ரோஹித் ராஜபக்‌ஷவின் கவனத்தை ஈர்த்தது.

இந்தச் சிறுவன் மீது ஏற்பட்ட ஆழ்ந்த அனுதாபத்தை தொடர்ந்து ரோஹித் ராஜபக்‌ஷ, இது தொடர்பில் தனது தாயார், பிரதமரின் பாரியாரான திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, கண் பார்வை கோரிய சிறுவனை கொழும்புக்கு அழைத்து வந்து நாட்டின் மிகச் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கண் மருத்துவர்களில் ஒருவரைக் கொண்டு சிறுவனுக்கு கண் பரிசோதனைகளை நடத்தினார்.

கொழும்பு கண் மருத்துவமனையில் இச்சிறுவன் ஒரு நிபுணரின் பரிந்துரையின் பேரில் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

சோதனை அறிக்கையின்படி, கண் மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுவனின் ஒரு கண்ணுக்கு பார்வை கொடுக்க முடியும் என்று சிறப்பு மருத்துவர் முடிவு செய்தார். அதற்கு நீண்ட கால சிகிச்சை அவசியமென நிபுணர் பரிந்துரைத்தார்.

அதற்கான சகல சுமைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ தீர்மானித்தார். சில மாதங்களின் பின்னர் ஜீவந்த ரத்நாயக்க அலரி மாளிகையில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பது ஒரு கண்ணில் நூறுக்கு 30 வீதத்திற்கும் அதிகமான பார்வையுடனாகும்.

இச்சிறுவன் புத்தகங்களை வாசிப்பதற்கு முயற்சிப்பதுடன், தொலைக்காட்சி பார்த்தல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகை காண்கிறார்.

ஜீவந்தவிற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை இன்னும் நிறைவுபெறவில்லை. இன்றும் அவர் வைத்திய சிகிச்சைக்காகவே கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

அதன்போது தனக்கு உலகை காண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து தனது வாழ்வில் ஒளியேற்றிய திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷவை சந்தித்து வணங்கி நன்றி கூறுவதற்காகவே சிறுவன் அலரி மாளிகைக்கு வருகை தந்திருந்தார்.