தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடு

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை வீட்டிலேயே தஙகியிருக்குமாறும் எக்காரணத்தை கொண்டும் வெளியே செல்லவேண்டாமெனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹானா கூறுகையில்,

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளிஇடங்களைச்சேர்ந்தவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள், பொலிஸ் மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் . தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்கள் தங்களின் வசிப்பிடத்தில் விதிக்கப்பட்ட தனிமை நீக்கப்பட்டவுடன் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது என்றார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகை காலத்தை அடுத்து கொவிட் தொற்று அதிகரித்ததால் இலங்கையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.