புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் இன்று
தேர்தல்கள் ஆணைக்குழுவில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (28) முதல் ஆரம்பமாகின்றன.
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான காரியாலயத்தில் இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுகின்றன.
இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் மூன்று நாட்களுக்கு, முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கட்சிக்கும் நேர்முகத் தேர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரம் தொடர்பில், அந்தக் கட்சிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 அரசியல் கட்சிகள் இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ளன.
பதிவுசெய்வதற்காக 40 அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை தாக்கல் செய்திருந்த நிலையில், அவற்றில் 22 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்யாமை உள்ளிட்ட சில காரணங்களினால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்த அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளின் பதிவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய, அந்தப் பணிகளை முன்னெடுத்துள்ளனவா? என்பது தொடர்பில் இன்றைய நேர்முகத் தேர்வில் ஆராயப்படவுள்ளது.