கொரோனா அச்சம் : கூடுதல் விதிமுறைகளை அறிவித்தது கேரள அரசு!
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், கேரள அரசு கொரோனா வைரஸ் தொற்றுநோய் கூடுதல் வதிமுறைகள் 2020 என்ற பெயரில் புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது.
இந்த விதிமுறைகளின் கீழ் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசின் மறு உத்தரவு வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மறு உத்தரவு வரை முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பொதுஇடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் திருமண நிகழ்வில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் சானிடைசர், முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள்படி செயற்படவேண்டும் என்பதுடன் வெளிநாடு வெளிமாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு செல்பவர்கள் கேரள அரசின் ஜக்ரதா என்ற இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விதிமுறைகள் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு அமுலில் இருக்கும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.