காவல்துறையினர் விரட்டிச்சென்ற டிப்பர் பெண்ணை மோதி தப்பிச்சென்றது (காணொளி)

காவல்துறையினர் விரட்டிச்சென்ற டிப்பர் பெண்ணை மோதி தப்பிச்சென்றது (காணொளி)

காவல்துறையினர் துரத்திச் சென்ற டிப்பர் வாகனமொன்று உந்துருளியில் பயணித்த பெண் ஒருவரை விபத்துக்குள்ளாகித் தப்பிச் சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் கடந்த 21ஆம் திகதி மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவியில் இச்சம்பவம் முழுமையாகப் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சப்ரகமுவ மாகாணத்தில் பதிவைக் கொண்ட LM 5114 என்ற இலக்கத்தைக் கொண்ட குறித்த டிப்பர் வாகனம் மணலை ஏற்றியவாறு காவல்துறையினரின் கட்டளையை மீறிப் பயணித்தபோது இரண்டு உந்துருளிகளில் மூன்று பொலிஸார்  அதனைத் துரத்திச் சென்றுள்ளனர்.

அதன்போது டிப்பர் சாரதி வாகனத்தைத்  திக்கம் பகுதியில் உள்ள சிறிய வீதி ஒன்றின் ஊடாக செலுத்திய வேளையில் எதிரில் உந்துருளியில் வந்த ஆசிரியை ஒருவர் மோதப்பட்டுள்ளார்.

டிப்பர் வாகனத்தைத் துரத்தி வந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் விபத்துக்கு உள்ளான ஆசிரியை மீட்காது, தொடர்ந்தும் டிப்பரை துரத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் மற்றொரு உந்துருளியில் வந்த காவல்துறை உத்தியோகத்தர் குறித்த ஆசிரியரை மீட்குமாறு அங்கிருந்த பொதுமக்களுக்கு உத்தரவிட்டு அவரும் டிப்பரை துரத்திச் சென்றுள்ளார்.

பின்னர் காயமடைந்த பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.