புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட தேங்காய் எண்ணெய் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மற்றும் சுங்கப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

இன்று இது தொடர்பில் உள்ளக பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுங்கப் பிரிவினருக்கும் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக கூறப்படும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்களை இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுங்கப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஃப்லடொக்ஸின் எனப்படும் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத 105 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் அண்மையில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

குறித்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒரு நிறுத்தின் தேங்காய் எண்ணெய் கொள்கலன்களே இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன