பிள்ளைகளை பயனுள்ள செயல்களில் ஈடுபட திசை திருப்புவது எப்படி?

குழந்தைகளை பயனுள்ள செயல்களில் ஈடுபடும் வகையில் திசை திருப்புவது அவசியம். அதன் மூலம் அவர்களின் திறமையை வளர்க்கவும் முடியும். அதற்கான வழிகளை இங்கே காணலாம்.

கொரோனா தொற்று காரணமாக குழந்தைகள் தற்போது வீட்டிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் வழக்கதை விட அதிகரிக்கும் அவர்களின் குறும்புத்தனத்தை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கும் பெற்றோர் நிறைய உள்ளனர். இந்த சிக்கலை தவிர்க்க குழந்தைகளை பயனுள்ள செயல்களில் ஈடுபடும் வகையில் திசை திருப்புவது அவசியம். அதன் மூலம் அவர்களின் திறமையை வளர்க்கவும் முடியும். அதற்கான வழிகளை இங்கே காணலாம்.

1. பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகத்திலோ, வங்கியிலோ மைனர் அக்கவுண்டு தொடங்கலாம். வங்கியில் உள்ள ஃபார்ம் நிரப்புவது, பணம் செலுத்துவது எப்படி அணுகுவது கணக்கு புத்தகத்தில் வரவு வைப்பது ஆகியவற்றை செய்ய சொல்லலாம். போஸ்ட் ஆபிசுக்கு அழைத்து சென்று பணம் செலுத்துவது எடுப்பது போன்ற நடைமுறைகளை கற்றுத்தரலாம்.

 


2. வீட்டிலேயே பழச்சாறுகள் தயாரிப்பது சப்பாத்திக்கு மாவு தேய்ப்பது அதில் வித்தியாசமான உருவங்களை செய்வது, சமையலுக்கு உதவுவது போன்ற விஷயஙகளை ஆண் குழந்தைக்கும் கற்றுத்தரலாம். பாத்திரம் கழுவுவது வீட்டை பெருக்குவது ஆகியவை எல்லோரும் செய்யக்கூடிய வேலைதான் என்பதை மனதில் பதியும்படி சொல்லித்தரலாம்.

3. அருகில் இருக்கும் நூலகத்திற்கு அழைத்து சென்று படிக்கும் ஆர்வத்தை உருவாக்கலாம். நாளிதழ்கள், பத்திரிக்கைகள், அங்கிருக்கும் புத்தகங்கள் ஆகியவற்றை படிக்க சொல்லலாம். அதில் இருந்து என்ன தெரிந்து கொண்டாய் என்று கேட்டு அவர்களது பொது அறிவை வளர்க்கலாம்.

4. இரவில் தூங்குவதற்கு முன்னர் இன்று என்ன புதிதாய் கற்று கொண்டாய் என்பது பற்றி டைரியில் எழுதும் பழக்கத்தை மேற்கொள்ள செய்யலாம். விடுமுறை காலங்களில் காலை தாமதமாக எழுவதை பழக்கமாக்கி விடாமல் சரியான நேரத்திற்கு தூங்கி எழுவதை வலியுறுத்த வேண்டும்.

5. குழந்தைகளை கூட்டமாக உட்காரவைத்து கதையின் தொடர்ச்சியை இன்னொருவர் சொல்ல ஊக்கப்படுத்தலாம். அதாவது ஒருவர் சொல்லத் தொடங்கிய கதையில் ஒரு பகுதியை மட்டுமே சொல்ல வேண்டும். அடுத்தவர் அவரது கற்பனை திறனுக்கேற்ப அந்த கதையின் அடுத்த பகுதியை சொல்லலாம். பின்னர் அடுத்தவர் மேற்கொண்டு கதையின் மற்றொரு பகுதியை சொல்ல வேண்டும். பெரிய குழுவாக இருந்தால் ஒரு சுற்று வந்த பின்னர் ஆரம்பித்த  இடத்தில் கதையை முடிக்க சொல்லலாம். குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை முயற்சிக்கலாம்.

6.செய்தித்தாள்களில் வரும் குறிப்பிட்ட செய்திகளை சேகரித்து ஒரு நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைக்கும் பழக்கதை ஏற்படுத்தலாம். அது விளையாட்டு, வானிலை, அரசியல், அறிவியல் என எதுவாகவும் இருக்கலாம். செய்தியை சுருக்கி தேதியிட்டு நோட்டில் எழுதி வைக்க சொல்லலாம்.

7. விடுகதைகளின் விடையை கண்டறிய உதவலாம். நான்கைந்து குழந்தைகளை ஒன்றாக சேர்த்து அவர்களிடம் பொது அறிவு தகவலை கொடுத்து யார் விரைவில் மனப்பாடம் செய்கிறார்கள் என போட்டி வைக்கலாம். இந்த விஷயத்தை குழந்தைகள் விரும்பும் வகையில் செயல்படுத்த வேண்டும்.