தப்பான காதல்.. தடம்புரண்ட வாழ்க்கை..

பெண்கள் தடம் புரளாமல் ஒழுக்கமாக வாழ வேண்டும். தவறான ஆண்களுடன் உருவாக்கிக்கொள்ளும் ஒழுக்கமற்ற வாழ்க்கை பெண்களை சிறைக்குள் தள்ளி, அவர்களது தலைமுறையினரின் எதிர்காலத்தையும் சிதைத்துவிடுகிறது.

தப்பான காதலும், தடம்புரளும் வாழ்க்கையும் பெண்களை நினைத்துப் பார்க்க முடியாத சோகத்திற்குள் கொண்டுபோய் தள்ளிவிடும். அதன் பிறகு தப்பை உணர்ந்து அவர்கள் அழுதோ, அரற்றியோ பலனில்லை. சட்டத்தின் பிடியில் சிக்கி, மீண்டு வரமுடியாமல் மீதமுள்ள காலத்தை ஜெயில் கம்பிகளுக்குள் செலவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். தவறுகளுக்கு இடம்கொடுத்து அப்படிப்பட்ட துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறாள், சிந்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கானல் நீராகிப்போன தனது வாழ்க்கையை கண்ணீரோடு சிறையில் இருந்து அவள் விவரிக்கிறாள்! சமூகத்திற்கு இது ஒரு பாடம்..!!

"பெற்றோரை எதிர்த்து, காதலித்தவனோடு ஓடிவிட்ட அம்மாவுக்கு நான் பிறந்திருக்கிறேன். அந்த ஆள் சில வருடங்களிலே என் அம்மாவையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு சென்றுவிட, நான் யாருக்கும் வேண்டாதவள் ஆனேன். எத்தனையோ விதமான தொல்லைகளுக்கு மத்தியில் எப்படியோ நான் வளர்ந்தேன். என் அம்மா மீண்டும் ஒரு திருமணம் செய்துகொண்டாள். நான் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்தேன்.

 


யாருடைய காதல் வலையிலும் விழாமல் திருமண பருவத்தை அடைந்தேன். எனது உறவினர் ஒருவர், ஊரில் உள்ள இளைஞரை எனக்கு திருமணம் செய்துவைத்தார். பத்து பவுன் நகை, மூன்று லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுத்து எங்கள் திருமணம் நடந்தது. நல்லநிலையில் வாழ நான் ஆசைப்பட்டேன். ஆனால் என் கணவரோ என்னை ஒரு மோசமான பெண் போலவே பார்த்தார். அவர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்த்தார். வாய்க்குள் எப்போதும் பான்மசாலா கிடக்கும். அவருக்கு மது, கஞ்சா பழக்கம் இருப்பது பின்னால்தான் எனக்கு தெரியவந்தது.

அவர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பெரிய பை ஒன்றை தூக்கிவருவார். அதில் சிறிய பொட்டலங்கள் நிறைய இருக்கும். ரகசியமாக பலர் வந்து அதனை வாங்கிச்செல்வார்கள். நடுராத்திரிக்குள் அந்த பை நிறைய பணம் சேர்ந்துவிடும். அது சமூகவிரோத செயல் என்பதை நான் உணர்ந்தேன். அவரது நண்பர்களின் வேலையும் அதுதான். போதைப் பொருட்களை விற்றார்கள்.

பணம் நிரம்பிய பையை வாங்கிச் செல்ல இளைஞன் ஒருவன் வருவான். பார்க்க நன்றாக இருப்பான். அவனுக்கு என் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது. அவன் நாகரிகமாக நடந்துகொள்வதால் எனக்கும் அவன் மீது இஷ்டம் ஏற்பட்டது. எனக்கும், அவனுக்கும் சமமான வயது. அந்த காலகட்டத்தில் நான் இரண்டாவதாக கர்ப்பமாகியிருந்தேன்.

எங்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கச்செய்யும் விதத்திலான சில நடவடிக்கைகளில் எனது கணவர் ஈடுபட்டார். பல விஷயங்களுக்காக அவனை எங்கள் வீட்டிற்குள் வர அனுமதித்தார். எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. `உன் கணவர் இதை எல்லாம் கண்டுகொள்ளமாட்டார். அதனால் நீ அவரை நினைத்து பயங்கொள்ள வேண்டாம்' என்று அவன் சொன்னது எனக்கு முதலில் அதிர்ச்சியளித்தாலும், பின்பு அதனை ஜீரணித்து ஏற்றுக்கொண்டேன்.

எனக்கு முதலில் மகன் பிறந்திருந்தான். எனது கணவரின் குடும்பத்தினருக்கு பேரனை ரொம்ப பிடிக்கும். இரண்டாவது மகள் பிறந்தாள். நான் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய பின்பும் அவனுடனான உறவு நீடித்தது. அவன் வீட்டிற்கு வந்துவிட்டு திரும்பும்போதெல்லாம் எனது மாமியார் அவனை மோசமாக திட்டுவார்.

என் மகளுக்கு இரண்டு வயதானபோது ஒரு நாள் வழக்கம்போல் என் கணவர் பெரிய பையுடன் வீட்டிற்கு வந்தார். அவர் குளிப்பதற்காக சென்றபோது, போதைப் பொருட்கள் தடுப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து என் கணவரை கைது செய்தார்கள். போதைப் பொருட்கள் இருந்த பையையும் எடுத்துச்சென்றனர்.

ஒரு வாரம் கடந்த நிலையில் நானும், காதலனான அந்த இளைஞனும் என் கணவரை ஜெயிலில் சந்தித்தோம். அப்போது அவர், `எனக்கு ஜாமீன் கிடைக்காது. தண்டனை கிடைப்பதும் உறுதி. அதனால் இனி இவன் (அந்த இளைஞன்) இஷ்டப்படி நடந்துகொள்' என்றார்.

அவன் அடிக்கடி வீட்டிற்கு வந்தது எனது கணவரின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. எதிர்த்தனர். நான் அவனோடு சென்றுவிடலாம் என்று கருதியபோது அவன் எனது மகளையும் உடன் அழைத்துச்செல்ல விரும்பவில்லை. எனது கணவரின் பெற்றோரோ, எனது மகனை மட்டும் ஏற்றுக்கொள்வதாகவும்- மகள் தனது மகனுக்கு பிறக்கவில்லை என்றும் சண்டையிட்டனர்.

எனது கணவர் சிறையில் இருந்து போனில் அவரது பெற்றோரிடம் பேசினார். இரண்டும் தனது குழந்தைகள்தான் என்றும், அவர்களை பராமரிக்க தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார். ஆனாலும் அவரது பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் மகளோடு அந்த காதலனிடம் சரணாகதி அடையும் நிலை எனக்கு ஏற்பட்டது.

சற்று தூரத்தில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு நாங்கள் குடியேறினோம். அவன் எனது தம்பி என்றும், எனது கணவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார் என்றும் பொய் சொல்லிவிட்டு ஒன்றாக வசித்தோம்.

ஒரு வருடம் கடந்த நிலையில் அவன் திடீரென்று ஒருநாள் `நம்மோடு வசிக்க இன்னொரு நபரும் வருவார். அக்கம்பக்கத்தினர் கேட்டால், அவர்தான் வெளிநாட்டில் வசித்த உனது கணவர் என்றும்- விடுமுறைக்கு வந்திருக்கிறார் என்றும் சொல். அந்த நபர் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி. போலீசில் இருந்து தப்பிக்க நம்மிடம் அடைக்கலம் கேட்டிருக்கிறார். கொஞ்ச நாட்களே இங்கு தங்குவார்' என்று சொன்னான். அதற்கு சம்மதம் தெரிவிப்பதை தவிர எனக்கு வேறு எந்த வழியும் இல்லை.

அந்த நபர் எங்களோடு வந்து தங்கினான். முதல் நாளே அவன் மோசமானவன் என்பது தெரிந்துவிட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவன் என்னை மானபங்கம் செய்தான். நான் அழுதேன். அப்போது அவன் `நீ இந்த மாதிரி அழும் வேலையை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே. நீ எப்படிப்பட்டவள் என்று உன் கணவர் என்னிடம் கூறியிருக்கிறான். உன் கணவனும், இங்கே தம்பியாக நடிக்கும் காதலனும் எனக்கு கீழ்தான் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றான். அதன் பின்பு அவனுக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் விரும்பியபடி எல்லாம் என்னை இம்சைப்படுத்தினான். எனது மகளை அருகில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்த்தேன்.

அவ்வப்போது நானும், என் காதலனும் சிறைக்கு சென்று கணவரை சந்தித்து பேசிவிட்டு வருவோம். அன்று நாங்கள் சிறையில் பார்த்துவிட்டு, திரும்ப வெகு நேரம் ஆகிவிட்டது. இருட்டில் நாங்கள் வீடு திரும்பியபோது அந்த நபர் வீட்டின் முன்னால் இருந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தான். என் குழந்தையை காணவில்லை. என் உள்ளுணர்வு எச்சரிக்க, கூச்சல்போட்டு அழுதேன்.

உடனே அந்த நபர், `அழுது ஊரைக் கூட்டாதே. குழந்தை விளையாடியபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது' என்றான். நான் அழுதுகொண்டே உள்ளே சென்றபோது, எந்த தாயாலும் தாங்கிக்கொள்ள முடியாத அந்த காட்சியை பார்த்தேன். என் குழந்தையின் உடலை ஒரு பாயில் சுருட்டிவைத்திருந்தான். நான் அந்த பாவியை நோக்கி ஆவேசமாக வந்தபோது என்னை பலவந்தப்படுத்தி மதுவை ஊற்றினான். அதில் போதைப்பொருள் எதையோ கலந்து வைத்திருக்கிறான். மறுநாள்தான் எனக்கு நினைவு திரும்பியது. எனது குழந்தையின் உடல் அங்கு இல்லை.

அப்போது அவன், என் காதலனை சுட்டிக்காட்டி, `நீ இவனோடு போலீஸ் நிலையம் செல். பள்ளிக்கு போன மகள் திரும்பிவரவில்லை என்று கூறிக்கொண்டு அழுதுகொண்டே நில். மற்றதை எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்..' என்றான்.

அவன் சொன்னதுபோல் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். ஆனால் போலீஸ் அதிகாரி என் அருகில் வந்து கேள்விகள் கேட்கும் முன்பே, நான் நடந்த உண்மைகள் அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அடியை தாங்கிக்கொள்ள முடியாமல் என் காதலனும் உண்மையை சொல்லிவிட்டான் என்பதை போலீசார் மூலம் தெரிந்துகொண்டேன்.

அந்த நபர், நான்கு வயதான என் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறான். உடலை மறைக்க என் காதலனும் துணைபுரிந்துள்ளான். `குழந்தையை நீ எப்படி அவனிடம் விட்டுச்சென்றிருக்கலாம்? அதனால் நீயும் குற்றவாளிதான்..' என்று பெண் போலீஸ் என்னிடம் சொன்னார். ஐந்து வருடங்கள் கடந்த பின்பே வழக்கு விசாரணைக்கு வந்தது. அதுவரை என்னை ஜாமீனில் எடுக்க யாரும் முன்வரவில்லை.

எனது குழந்தை பலாத்காரம் செய்யப்பட நானே காரணமாக இருந்துவிட்டேனே? மகள் கொல்லப்பட்டும் அவனை தண்டிக்காமல் நான் அமைதியாகிவிட்டேனே? அது மட்டுமின்றி, குற்றவாளியை காட்டிக்கொடுக்காமல் என் மகளை காணவில்லை என்று புகார் கொடுக்கவும் சென்றுவிட்டேனே.. என்னை எரியும் தீயில் தூக்கிப்போட்டுவிடலாம்.. எவ்வளவு தண்டனை கிடைத்தாலும் அது எனக்கு போதாது..." என்று குமுறுகிறாள் இந்த இளம் பெண்.

சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்துகொண்டு தனது வாழ்க்கை கதையை கண்ணீரோடு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரிடம் வெளிப்படுத்தியுள்ளாள்.

பெண்கள் தடம் புரளாமல் ஒழுக்கமாக வாழ வேண்டும். அதற்கு சமூகமும் துணைபுரியவேண்டும். தவறான ஆண்களுடன் உருவாக்கிக்கொள்ளும் ஒழுக்கமற்ற வாழ்க்கை பெண்களை சிறைக்குள் தள்ளி, அவர்களது தலைமுறையினரின் எதிர்காலத்தையும் சிதைத்துவிடுகிறது.