டிக்டாக் தடை: பணமதிப்பிழப்பு போன்று மக்கள் பாதிக்கப்படுவர் - எம்.பி. பேச்சு
டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 29 ஆம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்தது. சீனாவுடன் எல்லை மோதல் நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் உள்பட செயலிகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டிக்டாக் செயலி நீக்கத்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டது போன்றே மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மேற்கு வங்காள திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார்.
டிக்டாக் தடை தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து அவர் கூறுகையில்,’இது மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் முடிவு. இதன் மூலம் எந்த விதமான யுக்திகள் உள்ளன? வேலை இல்லாமல் இருப்பவர்களின் நிலை என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் சந்தித்த பாதிப்பு போன்று இப்போதும் பாதிக்கப்படுவார்கள்.
தேச பாதுகாப்பு என்பதால் டிக்டாக்கை தடை செய்வதால் எனக்கு எந்த பிரச்சனையும் ஆனால் இந்த கேள்விகளுக்கு பதில் யார் கூறுவது’’ என தெரிவித்துள்ளார்.