காவற்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த நபர்? மேலதிக விசாரணைகள் ஆரம்பம்
காவற்துறை பிணை வழங்கலின் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட களுபோவில பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஒருவரின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி கல்கிசை காவற்துறையினரால் ரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 49 வயதான தமது கணவர் மீது காவற்துறையினர் தாக்குதல் நடத்தியதாக அவரது மனைவி நேற்று குற்றம் சுமத்தினார்.
இதன்பின்னர், காவற்துறையினரால் பிணை வழங்கப்பட்ட தமது கணவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமைகள் காரணமாக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நேற்று முன்தினம் தமது கணவர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிகப்படவுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்