இந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி

இந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி

இந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகரானது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை என லடாக்கில் இராணுவ வீரர்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர், லடாக்கிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, லே என்ற இடத்தில் நிம்மு இராணுவ முகாமில், இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தைரியம், உலகளவில் இந்திய வீரர்களின் வீரம் என்ன என்பதைக் காட்டியுள்ளது. நீங்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருக்கும் மலையை விட உயரமானது உங்களது வீரம். இந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகரானது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை.

நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, இராணுவ வீரர்களான உங்கள் கையில்தான் உள்ளது. இராணுவ வீரர்களின் துணிச்சலை ஒருபோதும் நாடு மறக்காது.

நமது எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும் தவிடுபொடியாக்கி வருகிறோம். நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. நமது வீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன்.

கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் மாற்றமில்லை. சியாச்சின் முதல் கல்வான் உள்ள வரை நமது கட்டுபாட்டில் உள்ளது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால் நம்மை வலுப்படுத்தியுள்ளது. இந்தியா அமைதியை விரும்பக்கூடிய நாடு என்பதை உலகம் அறியும்.

இராணுவ வீரர்கள் தீர்க்கமாக உள்ளது அவர்களின் முகத்தை பார்க்கும்போது தெரிகிறது. கடந்த காலங்களில் பல எதிரிகளுடன் போரிட்டு வருகிறோம். நமது வீரம் வழிவழியாக வந்த வரலாறு கொண்டது.

நாடு பிடிக்கும் கொள்கைக்கு இந்த உலகம் எதிராக உள்ளது. நாடு பிடிக்கும் காலம் மலையேறி சென்றுவிட்டது. ஒவ்வொரு நாடும் தற்போது முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றன. எல்லை பகுதியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது முழுவீச்சில் நடக்கும். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் எல்லையில் இராணுவம் ஒருங்கிணைந்து செயற்பட முடியும்.

அமைதியை விரும்பும் நாம் தேவைபட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்க தயங்க மாட்டோம். நாட்டை அபகரிக்க பேராசையுடன் செயற்பட்டோர் எப்போதும் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளனர்” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் 15 திகதி இரவு மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த இராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் 20 இந்திய இராணுவ வீரா்கள் மரணமடைந்தனர்.

இந்தியா-சீனாஇ ராணுவத்தினா் இடையே மோதல் நிகழ்ந்த சூழலில், இராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே கடந்த வாரம் எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், இராணுவத் தலைமை தளபதி எம்.எம்.நரவணே ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று லடாக் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.