தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனைப் பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் என தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் தெரிவிப்பு

தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனைப் பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் என தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் தெரிவிப்பு

புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் வேதிப்பொருள் அடங்கியுள்ளதா? என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பெறுபேறுகள் இன்று கிடைக்கப்பெறலாம் என தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த மாதிரிகளின் அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்டிருந்த 13 தேங்காய் எண்ணெய் தாங்கி ஊர்திகளில் புற்று நோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் வேதிப்பொருள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில் அவற்றை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது.

பின்னர் குறித்த தேங்காய் எண்ணெய் சந்தையில் தொடர்ந்து விநியோகம் செய்யாமல் தடுப்பதற்காக தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களின் களஞ்சியசாலைகளையும் நுகர்வோர் விவகார அதிகாரசபை முத்திரையிட்டது.

அத்துடன் சந்தேகத்திற்கிடமான இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளிலும் அப்லாரொக்ஸின் வேதிப்பொருள் அடங்கியுள்ளதாக இலங்கை தரநிர்ணய நிறுவனமும், சுங்க திணைக்களத்திற்கு அறிக்கை ஒன்றை வழங்கி குறிப்பிட்டிருந்தது.

இந்த தேங்காய் எண்ணெய் சந்தையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தொடர்ந்தும் உறுதி செய்வதற்காக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு எழுமாறான மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் முன்னெடுத்திருந்தது.

அந்த மாதிரிகளின் பெறுபேறுகளே இன்றைய தினம் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது