விஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண்: சொந்த வீடு வாங்கியதாகவும் தகவல்
நடிகர் விஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் சென்னையில் சொந்த வீடு வாங்கியுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகர் விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் அந்த நிறுவனத்தின் மூலம் அவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது கூட இந்நிறுவனத்தின் மூலம் ’துப்பறிவாளன் 2’ மற்றும் ’சக்ரா’ ஆகிய படங்களை அவர் தயாரித்து வருகிறார்
இந்த நிலையில் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகாரில் தங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்த பெண் ஒருவர் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும், ஆறு வருடங்களாகப் பணி செய்து கொண்டிருந்த அவர் சிறிது சிறிதாக பணத்தை கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்
மேலும் கையாடல் செய்த பணத்தில் அவர் சொந்த வீடு வாங்கி உள்ளதாக தெரிய வந்ததாகவும், அதனால் அவர் கோடிக்கணக்கில் பணத்தை கையாடல் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலாளர் ஹரி தனது புகாரில் தெரிவித்துள்ளார்
இந்த புகாரை பெற்றுக்கொண்ட வடபழனி உதவி ஆணையர் இது குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறைக்கு அந்த மனுவை அனுப்பி வைத்தார். கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டால் சென்னை மத்திய குற்றப்பிரிவு இந்த மனுவை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.