சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை வருவாய்த் துறையிடம் இருந்து விடுவிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் பொலிஸ் நிலையத்தில் இருந்த வருவாய்த் துறையினரை தங்கள் பணிக்கு திரும்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் பொலிஸ் விசாரணைக் காவலில் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் நிலைய விசாரணையின்போது மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டதால் பொலிஸாருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் விடிய விடிய லத்தியால் தாக்கியது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி.யை விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அதன்படி சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் கொலை வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் ஐவரைக் கைது செய்தனர்.
அதேநேரம், காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் நீதிமன்ற உத்தரவின்படி சாத்தான்குளம் பொலிஸ் நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
மேலும் நீதிமன்ற உத்தரவின்படி தடயவியல் நிபுணர்கள் பொலிஸ் நிலையத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.