ப்ளோரோ டியொக்சி குளுக்கோஸ் ஒளடத உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

ப்ளோரோ டியொக்சி குளுக்கோஸ் ஒளடத உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

வேரஹெரவில் அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை வளாகத்தில் ப்ளோரோ டியொக்சி குளுக்கோஸ் ஒளடத உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கதிர்வீச்சு மருந்தான ப்ளோரோ டியொக்சி குளுக்கோஸ் ஒளடதம், புற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் PET மற்றும் CT பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

குறித்த மருந்தை உற்பத்தி செய்வதற்காக சுழல் விசை இயக்கி எனும் விசேட உபகரணம் பயன்படுத்தப்படுவதுடன், அதற்கான வசதிகள் இலங்கையில் இல்லாததால், குறித்த கதிர்வீச்சு ஒளடதம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

குறித்த ஒளடதத்தில் காணப்படும் கதிரியக்கம் தேய்வடையும் இயல்பால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் போது மருந்தின் இயலளவில் 97 வீதமானவை இழக்கப்படுவதுடன், எஞ்சுகின்ற இயலளவில் 10 நோயாளர்களுக்கு மாத்திரமே சிகிச்சையளிப்பதற்கு இயலுமாக உள்ளது.

அதனால், வருடாந்தம் 30,000 நோயாளர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையிருப்பினும், 1,600 நோயாளர்களை மாத்திரமே பரிசோதனை செய்ய முடிகின்றது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் குறித்த ஒளடதத்தை பயன்படுத்தி நோயாளி ஒருவரைப் பரிசோதிப்பதற்காக 54,000 ரூபாய் செலவாகின்றது.

எனினும் குறித்த ஒளடதத்தை உள்ளூரில் உற்பத்தி செய்தால் 14,000 ரூபாவாக குறைத்துக் கொள்ள முடியுமென கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இலங்கை அணுசக்தி சபை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் ப்ளோரோ டியொக்சி குளுக்கோஸ் ஒளடத உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக மின்சக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.