நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் நாடு திரும்பியவர்கள்
கடந்த 24 மணிநேரத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாளில் மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 49 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகளவான தொற்றுறுதியானவர்கள் கண்டறியப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 31 ஆயிரத்து 303 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தலா 17 பேரும், மொனராகலையில் 13 பேரும், அநுராதபுரத்தில் 11 பேரும் தொற்றுறுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா 8 பேரும், கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 6 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
குருநாகல், அம்பாறை, மாத்தளை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், களுத்துறை, கேகாலை, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதுதவிர, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா ஒரு கொவிட் 19 நோயாளரும் நேற்;று இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடமாகாணத்தில் தற்போது பரவலடைந்துள்ள கொவிட் 19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தினால் பூரண ஒத்துழைப்புகள் வழங்கப்படுவதாக என அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் தொடர்;ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்