மாங்கனி திருவிழாவில் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்
இறைவனின் திருவாயால் ‘அம்மையே‘ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில், காரைக்காலில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், கைலாசநாதர் கோவிலில், பக்தர்கள் இன்றி மாங்கனி திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்கியது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 10 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதனை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே உள்ளூர் தொலைக்காட்சிகள், யூ டியூப்பில் நேரடியாக கண்டு களித்தனர்.
முன்னதாக பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் ரூ.9 லட்சம் செலவில் அம்மையாரின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் புதிய கருங்கல் சிற்பங்கள், காரைக்கால் அம்மையார் குளக்கரை வாசலில் ரூ.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில், கோவில் மற்றும் குளக்கரையை சுற்றிலும் ரூ.5 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகள், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் ரூ.2½ லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார்.
மாங்கனி திருவிழாவின் 3-வது நாள் நிகழ்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகமும், 4-ந் தேதி காலை 11 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு மற்றும் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சியும், பிற்பகல் 12.15 மணிக்கு அமுது படையல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார்.