தாஜ்மஹாலின் பெயர் ராம் மஹால் என மாற்றப்படும்; சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.எல்.ஏ.!

தாஜ்மஹாலின் பெயர் ராம் மஹால் என மாற்றப்படும்; சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.எல்.ஏ.!

தாஜ் மஹால் பெயர் ராம் மஹால் என விரைவில் மாற்றம் செய்யப்படும் என உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால், முகலாயப்பேரரசர் ஷாஜஹானினால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்லறை மாளிகையாகும்.

1632ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை பூர்த்திசெய்ய 21 ஆண்டுகள் ஆகின என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற ‘தாஜ்மஹால்’ நினைவுச்சின்னத்தின் பெயர் ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளார்.

இவர் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தபோது பேசிய அவர், 'ஆக்ராவின் தாஜ்மஹால், ஒருகாலத்தில் சிவபெருமானின் ஆலயமாக இருந்தது.

எனவே, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தாஜ் மஹால் ராம் மஹால் என்று பெயர் மாற்றப்படும்,' என உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிவாஜியின் வழித்தோன்றல் ஆவார் என்று புகழாரம் சூட்டினார்.

'சிவாஜியின் வழித்தோன்றல்கள் உத்தரபிரதேச தேசத்திற்கு வந்துள்ளனர். சமர்த் குரு ராம்தாஸ் சிவாஜியை இந்தியாவுக்குக் கொடுத்தது போலவே, கோரக்நாத் ஜி, யோகி ஆதித்யநாத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியுள்ளார்' என்று சிங் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கருத்துக்கு மீண்டும் சர்ச்சை கிளம்பியதோடு, எதிர்கட்சியினர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இவர் இதற்கு முன்னரும்கூட பலமுறை பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது